Monday, 23 September 2013

தெய்வீக திருவண்ணாமலை! சுற்றுலாத்தலம்!


 தெய்வீக திருவண்ணாமலை
திருவண்ணாமலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலைநகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.
ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோவில்.
திருவண்ணாமலையில் இருக்கும் ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோவில். மற்ற இடங்களில் நாம் மலைமேல் சுவாமி இருப்பதாக கேள்வி பட்டிருப்போம், ஆனால் இங்கு மலையே சுவாமியாக இருப்பது தான் விசேஷம். இந்த மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர்.  இந்த மலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், பின் கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது. முக்தி தரும் இடமாக கருதப்படும் இடங்களில் இத்திருத்தலமும் ஒன்று.  திருவாரூரில் பிறக்க வேண்டும், காசியில் இறக்க வேண்டும், தில்லை சிதம்பரத்தை போய் பார்க்க வேண்டும், ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமிது.  இம்மலையில் சுற்றும் வழியில் அஷ்ட லிங்கங்கள் உள்ளது.  அவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம்.  இம்மலையை சுற்றி வந்தால் இறைவனை சுற்றுவதற்கு சமானம். அதுவும் பௌர்னமியன்று சுற்றினால் மிகவும் விசேஷம்.
இத்திருக்கோவிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிராத்திலும் பல சந்நிதிகள் இருக்கிறது.  முதல் பிராகரத்தில் சுவாமி சந்நிதியுள்ளது.  மூன்றாவது சந்நிதியில் உண்ணாமலை அம்மன் சந்நிதி உள்ளது.  மற்ற பிராகரங்களில் வேணுகோபாலசுவாமி சந்நிதி, விநாயகர் சந்நிதி, முருகன் சந்நிதி, கால பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி,  வள்ளாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், அருணகிரினாதர் மண்டபம், பாதாள லிங்கம், ஆயிரங்கால் மண்டபம், மற்றும் பல சந்நிதிகள் உள்ளது.
இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழ மரம்.  இந்த மரம் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.  குழந்தையில்லாதவர்கள் இந்த மரத்தில் சிறிய தொட்டில்கள் செய்து கட்டி வேண்டிக்கொள்வார்கள்.  குழந்தை பிறந்தவுடன் தொட்டில்களை நீக்கிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு விட்டு செல்வார்கள்.
ஸ்தல வரலாறு  
ஒரு காலத்தில் பிரம்மாவிற்கும், விஷ்னுவிற்கும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை உண்டாயிற்று.  இதனால் இருவரும் சிவபெருமானை மத்யஸ்த்திற்கு அழைத்தார்கள்.  ஆகையால் சிவபெருமான் இவர்களின் உயர்வு தாழ்வு எண்ணத்தை போக்க ஒரு போட்டி வைத்தார்.  யார் முதலில் தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ பார்த்து சொன்னால் அவர் தான் சிறந்தவர் என்றார். பிறகு சிவன் ஜோதிமயமாக தன் உருவை மாற்றிக் கொண்டார். இதனால் விஷ்னு வராக அவாதாரம் எடுத்து அடியை காண பூமியை குடைந்து சென்றார். ஆனால் அவரால் முடியவில்லை.  தான் செய்தது தவறு என்று ஏற்றுக் கொண்டார்.  அதுபோல பிரம்மா அன்னப்பறவையாக மாறி முடியை தேடிச் சென்றார். இடையில் தாழம்பூ சிவனின் முடியிலிருந்து கீழே விழுவதை பார்த்துவிட்டு, சிவனின் முடியைக் காண இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று கேட்டார்.  அதற்கு தாழம்பூ தாம் பல்லாயிற வருஷ காலமாக கீழே விழுவதால் தனக்கு தெரியவில்லை என்றது. இதனால் பிரம்மா தாம் தோர்க்கக்கூடாது என்ற எண்ணத்தினால் தாழம்பூவை தாம் சிவனின் முடியை பார்த்ததாக பொய் சாட்சி கூற கூறினார்.  இதற்கு தாழம்பூவும் ஒத்துக்கொண்டது.  இதனால் கோவம் அடைந்த சிவபெருமான் பிரம்மாவிற்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவபூஜைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபித்தார்.  அப்படி ஜோதியாக சிவன் நின்ற அந்த இடம் தான் திருவண்ணாமலை ஸ்தலம்.
இந்திரலிங்கம்

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.
அக்னிலிங்கம்
கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.
யமலிங்கம்.
கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது.
நிருதி லிங்கம்
கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.
வருண லிங்கம்
கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.
வாயு லிங்கம்
கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிறல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

குபேர லிங்கம்
கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.

ஈசானிய லிங்கம்
கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிருவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.

திருவிழாக்கள்
திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இதுதவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகை-யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானாதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் அல்லது டிசம்பர்  மாதம் வரும்.
இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று, காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும்.[4] இந்த தீபமானது தொடர்ந்த்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.
இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.
மகான்கள்
இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்-வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி இறக்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.மற்றும் விசிறி சாமியார் யோகிராம் சுரத்குமார்  ,சேஷாத்திரி மகரிஷி, குகை நமசிவாயர் சுவாமிகள் போன்ற எண்ணற்ற மகான்கள் வாழ்ந்த பூமி திருவண்ணாமலை.

0 comments:

Post a Comment