டெல்லி செங்கோட்டை |
உலகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்.... டெல்லி செங்கோட்டை டெல்லி நகரின் இன்னொரு கம்பீரம் 'செங்கோட்டை'. இந்திய சுதந்திரதினத்தன்று பிரதமர் தேசியக்கொடியேற்றி உரையாற்றும் பிரம்மாண்ட இடம். இதை உருவாக்கியவர் மொகலாய மன்னர் ஷாஜஹான். தனது தலைநகரத்தை ஆக்ராவில் இருந்து ஷாஜஹானா பாத்திற்கு (தற்போதைய பழைய டெல்லி) ஷாஜஹான் மாற்றியபோது செங்கோட்டை உருவானது. இதனைக் கட்டிமுடிக்க 1638-48 வரை பத்தாண்டு ஆனது. செலவிட்ட தொகை அப்போதைய மதிப்புக்கு ஒருகோடி ரூபாயாம். யமுனை நதிக்கரையில் ஒப்பிலா அழகுடன் எழுந்து நிற்கும் செங்கோட்டை, பாரசீக, ஐரோப்பிய, இந்திய கட்டடக் கலைகளை குழைத்து எழுப்பப்பட்டது. கண்களை மயக்கும் கலைநயம், சவால்விடும் கட்டுமானம், ஆச்சரியப்படுத்தும் தோட்டக்கலை போன்றவை இன்றளவும் போற்றப்படுகிறது. டெல்லிகேட், லாகூர்கேட் என இருபெரும் நுழைவாயில்கள் உள்ளன. கோட்டைக்குள் இருக்கும் அரசவை மண்டபங்களில் மட்டுமின்றி அந்தப்புரங்களிலும்கூட கலைநயம் கண்சிமிட்டுகிறது. 'திவான்- இ- ஆம்' எனப்படும் தர்பார் மண்டபம் பொதுமக்களும் பிரதிநிதிகளும் அமரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே மன்னருக்காக அமைக்கப்பட்டிருக்கும் உப்பரிகையும் கம்பீரமானது. 'ஜெனானா' என்றழைக்கப்படும் அந்தப்புரம், மும்தாஜ் மஹால், ரங் மஹால் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள சலவைக்கல் பதிக்கப்பட்ட நீருற்று புதுமையின் பதிப்பு.அவுரங்கசீப்பின் வழிபாட்டுக்காக கட்டப்பட்ட மோத்திமஸ்ஜித் எனப்படும் பியர்ல் மஸ்ஜித் (முத்து மசூதி) முழுவதும் சலவைக்கல் மயமே. இவைதவிர அரச குடியிருப்புகள் அமைந்திருந்த 'நஹ்ர்-இ-பேஹிஸ்ட்' என்ற பகுதி அசத்தல் ரகம். வீடுகளுக்கு உள்ளேயே யமுனை ஆற்றின் நீர் ஓடும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி, கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும்கூட கால்வாய்வெட்டி நனவாக்கிய மொகலாய மன்னர்கள். இதை 'சொர்க்கத்தின் நீரோடை' என்றும் அழைத்து வந்தனர். நீரோடையை இன்றும் காணலாம். செங்கோட்டையைக் கட்டியவர் ஷாஜஹான் என்றாலும் அவருக்குப் பின்னர் அவுரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களும் சில மாற்றங்களை செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது கண்டோன்மென்ட்டாக (ராணுவமுகாம் மற்றும் குடியிருப்பு பகுதி) செங்கோட்டை பயன்படுத்தப்பட்டது. அப்போது சில கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப்பிறகும் ராணுவக்-கட்டுப்பாட்டில் இருந்துவந்த செங்கோட்டை, 2003ம் ஆண்டில் இந்திய சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்குள்ள மும்தாஜ் மஹாலில் மொகலாய மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே வரலாற்றுப் பொக்கிஷங்கள். பெருமைக்குரிய டெல்லி செங்கோட்டை, யுனெஸ்கோவால் 2007ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. |
0 comments:
Post a Comment