Thursday, 26 September 2013

கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி: பிளஸ் 1 மாணவியர் கண்டுபிடிப்பு!


மனித உடலில் இருந்து வெளியேறும் வாசனையை, திரவம் மூலம் உருவாக்கி, கொசுக்களை கவர்ந்திழுத்து அழிக்கும் புதிய கருவியை, தனியார் பள்ளி மாணவியர் கண்டுபிடித்துள்ளனர்.


சென்னை, பெரம்பூர், கல்கி ரங்கநாதன் மான்ட்போர்டு மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் ஒப்பிலியா, தேன்மொழி, அபிராமி ஆகிய மூன்று மாணவியர், மிக மிக குறைந்த செலவில் கொசுவை ஒழிக்கும் கருவியை கண்டுபிடித்து உள்ளனர்.இந்த புதிய கருவியின் செயல்பாடு குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு, அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

sep 26 - tyec mosqute

 


அப்போது மாணவியர் கூறியதாவது:மனித உடலில் இருந்து வெளியேறும் வெப்பம், கார்பன் டை ஆக்சைடு, வியர்வையில் இருந்து வெளிப்படும் வாசனை மூலம் கொசுக்கள் மனிதர்களை அடையாளம் கண்டுபிடித்து, கடிக்கின்றன. அதன் அடிப்படையில் தான் இந்த கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.


*செவ்வக வடிவில் பெட்டி போன்று காணப்படும் இந்த கருவியில், இரண்டு பக்கங்களிலும் கம்பி வலைகள் உள்ளன. அந்த வலைகளில் 20 முதல் 40 வாட் வரை மின்சாரம் பாய்ச்சப்படும்.


*பெட்டியின் கீழ்ப்பக்கத்தில் மூன்று திரவங்களை கொண்ட கண்ணாடி குடுவை பொருத்தப்பட்டுள்ளது.


*இரண்டு துளைகள் கொண்ட ரப்பர் அடைப்பான் மூலம் அந்த குடுவை மூடப்பட்டுள்ளது.



*ஒரு துளை வழியாக காற்றை குடுவைக்குள் செலுத்தும் போது, திரவம், கம்பி வலை வழியாக வாயுவாக வெளியேறும்.


*இந்த வாயு, மனித உடலில் வியர்வை வாசனை போன்று இருக்கும். அந்த வாசனையால், கவரப்படும் கொசுக்கள், கம்பி வலையை நோக்கி ஈர்க்கப்படும். மின்சாரம் தாக்கி அழியும்.


இந்த கருவியை தயாரிக்க, 1,750 ரூபாய் செலவாகும். திரவ கலவை 50 மி.லி., அளவு, 30 ரூபாய் ஆகும். இந்த கலவை இரண்டு மாதங்களுக்கு பயன்படும்.


கருவிக்கு ஐந்து ஆண்டுகள் வரை உத்தரவாதம் தரலாம். 


கருவியில் இரவு நேர மின்விளக்கும் பொருத்திக் கொள்ளலாம்.தற்போது கடைகளில் விற்கப்படும் கொசு ஒழிப்பு மருந்துகள் மனிதர்களுக்கு நுரையீரல் பாதிப்பு உட்பட, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்த திரவ கலவை அதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தாது. 

அதற்கு உரிய சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.இவ்வாறு மாணவியர் விளக்கம் அளித்தனர்.


கருவியின் செயல்பாடுகளை கேட்டறிந்த மேயர் சைதை துரைசாமி, கருவி தயாரிப்பு செலவை குறைக்க மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.
இதுகுறித்து மாணவியர் கூறுகையில், ‘தற்போது இந்த கருவி, பிளைவுட் மூலம் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டால் செலவு இன்னும் குறையும்’ என்றனர்.

0 comments:

Post a Comment