Wednesday, 25 September 2013

ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியல்- பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டுமா?


இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இணையதள மையங்கள் மூலமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்புவோர் அதாவது பெயரை சேர்த்தல், திருத்துதல் மற்றும் தவறான பெயர்களை சரி செய்து மாற்றுதல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. இணையதளத்தை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், மாற்றம் செய்தல் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கும் முறை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள போதும், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இணைய தளத்தை பயன்படுத்துவதில் தமிழகம் பிற மாநிலங்களைக் காட்டிலும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இதனைக் களையும் வகையில் இணையதள மையங்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் பணிக்கு இணையத்தை மக்கள் பயன்படுத்தும் முறையை நடைமுறைப் படுத்த அரசு திட்டமிட்டது. அதற்காக விருப்பமுள்ள மையங்களில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 



அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 86 இணையதள மையங்களும், தமிழகத்தில் இருந்து 944 இணையதள மையங்களும் வாக்காளர் பட்டியல் பணியை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தது. அந்தக் குறிப்பிட்ட இணையதள மையங்களுக்கு இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் குறித்த பயிற்சி தமிழகம் முழுவதும் நேற்று முன் தினம் நடைபெற்றது. பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட இளையதள மைய உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 



அவர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான விக்ரம் கபூர், மாநகராட்சி வருவாய் அதிகாரி(தேர்தல்) பெஞ்சமீன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சி குறித்தும், தமிழக வாக்காளர்கள் குறித்தும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது, ‘இந்தியாவில் கேரளா மாநிலத்தில் 75 சதவீத பேரும், ஆந்திராவில் 40 சதவீத பேரும் இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பித்துள்ளனர். தகவல் நுட்ப தொழிற்துறையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருந்து வரும் தமிழகத்தில் இணையதளம் மூலமாக 7.8 சதவீத பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பித்துள்ளனர்.


கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை வாக்காளர் வரைவு பட்டியலுக்கு 2.50 லட்சம் பேர் விண்ணப்பத்திருக்கின்றனர். இதில் இணையதளம் மூலம் 20 ஆயிரம் பேர் தான் விண்ணப்பித்து இருக்கின்றனர். இணையதளம் மூலமாக வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பம் செய்வது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமும், மக்களுக்கு சிரமத்தை குறைக்கும் வகையிலும் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் இணையதள மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், மாற்றம் செய்தல் போன்ற பணிகள் வரும் 1 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிப்போரின் இல்லத்துக்கு தேர்தல் அலுவலர்கள் வந்து பெயர், முகவரி உள்பட விவரங்களை சரிபார்ப்பார்கள். பணிகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் 40 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்' எனத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment