Tuesday, 31 December 2013

பத்துவிதமான சக்திகள்...!!!





தசமஹவித்யாவின்  பத்துவிதமான சக்திகள்


தசமஹவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்து விதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா. நமது ஆணவம் இந்த சக்திகளை உணராத வண்ணம் நம்மை இருளில் வைத்திருக்கிறது. ஆணவம் அற்ற நிலையில் மஹா சக்திகளை முழுமையாக உணர முடியும். நடைமுறையில் தசமஹாவித்யா தவறான பாதையில் கையாளப்படுகிறது. செல்வம் - அஷ்டமா சித்திகள் என கீழ்த்தரமான நோக்கத்திற்காக இந்த மஹாவித்யா பயன்படுத்தப்படுகிறது.


ஓர் ஊரில் மாபெரும்ஞானி ஒருவர் வாழ்ந்துவந்தார். தினமும் அவரிடம் பலர்அறிவுரைகேட்டு வருவதுண்டு. சமீபகாலமாக ஊரில் அடிக்கடி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடுபோனதால் இதன் காரணம் என்ன என மக்கள் ஞானியிடம் கேட்டனர். அகந்தை அதிகமாவதால் செல்வம் அதிகமாக சேர்த்து மக்கள் மாயையில் மூழ்கி இருப்பதை உணர்ந்த ஞானி, அவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் கொடுக்க எண்ணினார். எல்லா செயலுக்கும் "நானே" காரணம் என்றார்.


'நான்' என்ற எண்ணமே ஆணவத்தின் அடையாளம் என பொருள்பட ஞானி கூறினாலும், மக்கள் அறியாமையில் இருந்ததால் திருட்டு அனைத்துக்கும் தான் மட்டுமே காரணம் என கூறுவதாக எண்ணி அவரை அடித்து கொன்றனர். இந்த கதையை கூற காரணம் தசமஹாவித்யா சரியான முறையில் போதிக்கப்பட்டாலும், அதை பயன்படுத்துபவர்கள் அற்ப விஷயத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மாபெரும் சக்தி வாய்ந்த யானையை மனிதன் கட்டுப்படுத்தி, கடைவீதியில் சில்லறை காசு வாங்கவைக்கும் சமூகத்தில் மஹாவித்யாவை கற்று மேல்நிலையில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள் தனமே.


தசமஹாவித்யா அனைத்து இடங்களிலும் இருப்பதாக கூறினேன். அது சுவை [ நவரசம்], உணர்வுகள், நவகிரகங்கள் என அனைத்து பொருளின் இயங்கு சக்தியாக இருப்பது மஹாசக்தியே. அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்துகொள்ளலாம்.

1. மாதங்கி : என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள்.

2. புவனேஸ்வரி : மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தர வதனமும் நிறைந்தவள்.

3. பகுளாமுகி : பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள்.

4. திரிபுரசுந்தரி : பதினாறு வயது கன்னிகையின் உருவை கொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம் என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்கியவள் . சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.

5. தாரா : நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹா சக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.

6. கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும் , செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லஷ்மியாக வணங்குகிறோம்.
வெள்ளை யானை சூழ வலம் வரும் நாயகி கமலாத்மிகா.

7. காளி : கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.

8. சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்துவரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் - பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.

9. தூமாவதி : கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிறஆடையும், நகைகள் இல்லாத விரிந்ததலையும் கொண்டவள். கையில் புகைகக்கும் பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.

10. திரிபுர பைரவி : பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

தசமஹா வித்யாவில் ஒவ்வொரு சக்தியின் உருவங்கள் விளக்கப்பட்டாலும் நிதர்சனத்தில் இவர்களுக்கு உரு கிடையாது. அவர்களின் செயல்களை விளக்கவே உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சக்திக்கு உரியதாக கொண்டாடப்படுகிறது. மாஹளய அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு விஜய தசமி வரை இவர்களே வணங்கப்படுகிறார்கள். வசந்த காலத்தை வரவேற்க நவராத்திரி கொண்டாடபடுவதாக சொல்வதுண்டு. உண்மையில் இந்த மஹாசக்திகள் நம்முள் தியானிக்கபட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தகாலம் தானே?

உலகில் அனைத்து உருவாக்கத்திலும் மஹா சக்தியின் அம்சம் உண்டு. மஹா சக்தியை யந்திரத்தில் ஆவாகனம் செய்து மந்திரத்தால் அழைத்தால் அவர்களின் சக்தியை வெளிப்படுத்துவாள். மஹா சக்தியின் வரிசை அமைவுகள் தந்த்ர சாஸ்திரத்தில் ஒன்றுபோலவும் தேவி மஹாத்மியத்தில் வேறு அமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நவகிரகத்தின் அடிப்படையில் நான் வரிசைப்படுத்தியுள்ளேன்.

மஹா சக்திகளின் தொடர்பு கொண்ட விஷயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. வேத சாஸ்திரம், தந்த்ர சாஸ்திரம், தேவி பாகவதம், தேவி மஹாத்மியம் மற்றும் லலிதா சஹஸ்ர நாமம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டதன் எளிய வடிவமே.


தசாவதாரம் கூட இவளின் சக்தியாலேயே இயங்குகிறது. மஹாவித்யை குறிக்கும் பொருட்களை இதுபோல வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம். இந்த நவ தானியங்களில் அரிசி ,கோதுமை தவிர கடலை மற்றும் பருப்பு வகைகளிலும் ஒன்பது வகை உண்டு. நவராத்திரி நாளில் ஒன்பது வித்யாவாசினிகளை வழிபட்டு அவர்களுக்கு உண்டான தானியத்தை படையாலாக உட்கொள்ளும் வழக்கம் நம் சம்பிரதாயத்தில் ஒன்று. நவகன்னிகைகளை அழைத்து அவர்களின்மேல் மஹாசக்திகளை ஆவாஹனம் செய்து வழிபடும் முறையும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தசமஹா வித்யாவிற்கு தனித்தனி கோவில்கள் உண்டு. ஆதி சங்கராச்சாரியார் இதை தொடர்புகொண்டு புதிப்பித்தார் என்பது வரலாறு. ஹரித்துவாருக்கு அருகில் கன்கல் என்ற ஊரில் இருக்கும் ஆலயத்தில் தசமஹாவித்யா அனைத்தும் யந்திரங்களுடனும் மந்திரங்களுடனும் ஸ்தாபிக்கபட்டுள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்தில் ஸ்ரீ சக்ரத்தில் அமைந்திருக்கும் மஹா சக்தியையும், மற்ற தசமஹாவித்யாக்களையும் தெரிந்துகொள்ளலாம். முறையான தீட்சை மூலம் தசமஹாவித்யா உபாசனை செய்யும் பொழுது நமது பிறவியின் நோக்கம் கைகூடும். தீட்சை பெறும் வரையில் வெளியே மஹா சக்திகளை தேடாமல் உங்கள் உள்ளே பத்துவித சக்திகளாக இருப்பவளை தியானியுங்கள். அவளே குருவாக வந்து தீட்சை தருவாள்.

0 comments:

Post a Comment