Tuesday, 31 December 2013

தமிழ் சினிமா 2013 ஒரு பார்வை




 தமிழ் திரையுலகை பொருத்தவரை 2013ம் ஆண்டும் காமெடி படங்களே பெரும் அளவில் வெளியாகின. பெரிய நடிகர்கள் படங்கள் வசூல் ரிதியில் முன்னணியில் இருந்தாலும், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சிறு நடிகர்களின் படங்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்தது.

மணிரத்னம், பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்களின் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. நலன் குமாரசாமி, நவீன் உள்ளிட்ட புதிய இயக்குநர்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்கள்.

காமெடி நடிகர்கள் பட்டியலில் சந்தானம் இல்லாத சில படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றது. சூரி, ’எதிர்நீச்சல்’ சதிஷ் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் தங்களது முத்திரையை பதித்தார்கள்.

மொத்தத்தில் புதிய இயக்குநர்கள் கவனம் ஈர்த்தனர். சிறு நடிகர்களின் படங்கள் வசூலை வாரிக் குவித்தன. புதிய கதைகளத்தில், புதிய நடிகர்கள் நடித்தால் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தமிழ் திரையுலகிற்கு உணர்த்தினார்கள் ரசிகர்கள்.

அவ்வகையில் 2013 ஜனவரி முதல் 2013 டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் வெளியான முக்கியமான படங்களும், அதற்கு கிடைத்த வரவேற்பையும் பார்க்கலாம்.

ஜனவரி : ஆரம்பமே அதிர்ச்சியளித்த 'அலெக்ஸ் பாண்டியன்'

'அலெக்ஸ் பாண்டியன்', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'சமர்' ஆகிய படங்கள் ஜனவரியில் வெளியான முக்கியமான படங்கள். பட்டித் தொட்டி எங்கும் விளம்பரப்படுத்தி, பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி விட வேண்டும் என்ற நினைப்புடன் ஸ்டூடியோ க்ரின் 'அலெஸ் பாண்டியன்' படத்தினை வெளியிட்டது. ஆனால் நடந்ததோ, 'எப்படி விளம்பரப்படுத்தினாலும் படம் பிடிக்கவில்லை' என்று நிராகரித்தனர் ரசிகர்கள். வருடத் தொடக்கமே கார்த்திக்கு அதிர்ச்சியளித்தது.

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் வெளியீட்டு சமயத்தில் பாக்யராஜ், 'இது எனது 'இன்று போய் நாளை வா' படத்தின் மறுபதிப்பு. ஆகையால் எனக்கு பணம் தர வேண்டும்' என்று கே.பாக்யராஜ் செய்த சர்ச்சையினிடையில் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் சந்தானம். சந்தானம், பவர் ஸ்டார் ஆகியோர் ரசிகர்களுக்கு லட்டை அளித்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளினார்கள்.

வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியான 'சமர்' போதிய வரவேற்பை பெறவில்லை. தியேட்டர்கள் கிடைக்கவிடாமல் செய்கிறார்கள் என்று பெரும் சர்ச்சையில் குறைவான திரையரங்குகளில் வெளியானாலும் மக்களால் கொண்டாடப்படவில்லை.

பிப்ரவரி : விஸ்வரூபமெடுத்த கமல்

'கடல்', 'டேவிட்', 'விஸ்வரூபம்', 'ஆதிபகவன்', 'ஹரிதாஸ்' ஆகிய படங்கள் பிப்ரவரியில் வெளியான முக்கியமான படங்கள்.

படத்தின் புகைப்படம் ஒன்றைக் கூட வெளியிடாமல், 'நெஞ்சுக்குள்ள' என்ற பாடல் மூலம் மக்களை திரையரங்கிற்கு இழுத்த படம் 'கடல்'. ஆனால் 'கடல்'க்கு உள்ளே போயிட்டு, மணிரத்னம் அளித்த சுனாமியால் மக்களுக்கு தலைவலியை உண்டாக்கி, நிராகரிக்க வைத்த படம். 'கடல்' மூலம் அதிர்ச்சியளித்தார் மணிரத்னம் என்றால், அவரது உதவி இயக்குநர் பிஜாய் நம்பியார் 'டேவிட்' மூலம் பேரதிர்ச்சி கொடுத்தார்.

கடும் சர்ச்சைக்கு இடையே பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது 'விஸ்வரூபம்'. முதலில் தமிழகத்தை தவிர இதர இடங்களில் வெளியானது. வரவேற்பை பெற்றது. கமல் ரசிகர்கள் கேரளா, பெங்களூர் என வெளியூர்களுக்குச் சென்று 'விஸ்வரூபம்' படத்தினை கண்டு களித்தார்கள். 'எனது ஆழ்வார்பேட்டை வீட்டை வைத்து படம் எடுத்திருக்கிறேன். படம் வெளிவராவிட்டால் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாவேன்' என்று கமல் கூறினார். ரசிகர்களோ அவருக்கு செக் மூலமாக பணத்தை அனுப்பி கமலை தங்களது அன்பால் அடிமையாக்கினார்கள். பின்னர் தமிழகத்திலும் படம் வெளியானது. படம் வெற்றியடைந்தவுடன் பணம் அனுப்பிய இதயங்களுக்கு நன்றியுடன் அவர்களது பணத்தை உரியவர்களுக்கே அனுப்பி வைத்தார் கமல்.

நீண்ட மாதங்கள் தயாரிப்பிற்கு பிறகு வெளியான அமீரின் 'ஆதிபகவன்' திரைப்படம், படம் பார்க்க வந்தவர்களை 'பகவானே.. படமா இது' என்று கேட்க வைத்தது. அமீர் இயக்கத்தில் வெளியாகி முற்றிலும் நிராகரிக்க படமாக 'ஆதிபகவன்' அமைந்தது. இப்படத்திற்காக ஜெயம் ரவியின் காத்திருப்பு வீணானது.

சினிமா விமர்சகர்கள் கொண்டாடிய படம் 'ஹரிதாஸ்'. குமாரவேலன் இயக்கத்தில் வெளியானது. திருமணத்திற்கு பிறகு சினேகா இப்படத்தில் நடித்தார். ஆட்டிஸம் பாதித்த சிறுவனை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருந்தார்கள். வசூல் ரீதியாக வரவேற்பை பெறாவிட்டாலும், அனைவரது பாராட்டையும் பெற்று தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களுள் ஒன்றாக இடம் பிடித்தது.

மார்ச் : 'பரதேசி' மூலம் திரும்பிய பாலா

'பரதேசி', 'வத்திக்குச்சி', 'சென்னையில் ஒரு நாள்', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய படங்கள் மார்ச்சில் வெளியான முக்கியமான படங்கள். 'அவன் இவன்' படத்தின் மூலம் சற்றே சறுக்கிய பாலா, மீண்டும் தனது எதார்த்த உலகிற்கு திரும்பிய படம் 'பரதேசி'. 'ரெட் டீ' என்ற நாவலை மையப்படுத்தி எடுத்தாலும், அதில் அதர்வா, வேதிகா போன்ற நடிகர்களை கதைக்கு ஏற்றார் போல் நடிக்க வைத்து 'பாலா இஸ் பேக்' என்று பேச வைத்தார். அதர்வாவின் திரையுலக வாழ்வில் முக்கியமான படமாக அமைந்தது ‘பரதேசி’.

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வெளியானதால் பெரிதும் எதிர்பாக்கப்பட்டு, குச்சி தீப்பிடிக்காமல் தீப்பெட்டிக்குள் அடங்கிய படம் 'வத்திக்குச்சி'.

'டிராபிக்' என்ற வரவேற்பை பெற்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் 'சென்னையில் ஒரு நாள்'. விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரியளவிற்கு படம் சோபிக்கவில்லை.

பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'. பாண்டிராஜின் காமெடி பாணி இயக்கத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் இருவரையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய படம்.

ஏப்ரல் : பவர் கட்டானலும் இருப்பேன் என அடம்பிடித்த ராஜகுமாரன்


'சேட்டை', 'கெளரவம்', 'திருமதி தமிழ்', 'உதயம் NH4' ஆகிய படங்கள் ஏப்ரலில் வெளியான முக்கியமான படங்கள். 'டெல்லி பெல்லி' இந்தி படத்தின் தமிழ் ரீமேக் தான் 'சேட்டை'. ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா என முக்கியமான நடிகர்கள் நடிப்பில் வெளியானலும், இவங்களுக்கு எல்லாம் சேட்டை ஒவராயிடுச்சு என்று மக்கள் புறந்தள்ளிவிட்டார்கள். ராதாமோகன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கெளரவம்', படக்குழுவுக்கு கௌரவத்தை தரவில்லை.

'திருமதி தமிழ்' படத்தைப் பார்த்து விமர்சகர்கள், மக்கள் என அனைவருமே சிரித்தார்கள்; படம் பார்த்து அல்ல, படத்திற்காக ராஜகுமாரன் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து. ராஜகுமாரனின் மேக்கப்பும், அவர் கொடுத்த ’போஸ்’களும், முக்கியமாக அவரே அவருக்கு கொடுத்துக் கொண்ட 'சோலார் ஸ்டார்'பட்டமும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், படம் போஸ்டரில் மட்டும் நூறு நாளை வெற்றிகரமாகக் கொண்டாடியது.

சாதாரண கதையை வித்தியாசமான திரைக்கதை மூலம் சுவாரசியமாக்கலாம் என்று உணரவைத்த படம் 'உதயம் NH4'. விமர்சகர்களிடையே வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் எந்தவித பெரிய மாற்றத்தையும் செய்யவில்லை.

மே : சூது கவ்வும் நேரம்

'எதிர்நீச்சல்', 'மூன்று பேர் மூன்று காதல்', 'சூது கவ்வும்', 'நாகராஜ சோழன்', 'நேரம்', 'குட்டிப்புலி' ஆகிய படங்கள் மே மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். பாடல்கள் மூலமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'எதிர் நீச்சல்' மக்களிடையே வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது மட்டுமன்றி, சிவகார்த்திகேயனை முன்னணி நாயகனாக்கியது. தனுஷ் இப்படத்தின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளர் ஆனார்.

அர்ஜுன், விமல், சேரன் நடிப்பில் முன்னணி இயக்குநர் வஸந்த் இயக்கத்தில் வெளியான 'மூன்று பேர் மூன்று காதல்' படம் வரவேற்பைப் பெறவில்லை.

'சூது கவ்வும்' என்ற படத்தின் மூலம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் முக்கியமான இயக்குநர் ஆனார் நலன் குமாரசாமி. ப்ளாக் காமெடி களத்தில், தமிழக அரசியலை சாடி எடுக்கப்பட்ட படம். மணிவண்ணன் - சத்யராஜ் இணைப்பில் வெளியான 'நாகராஜ சோழன்' பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, படம் பார்த்தவர்களால் 'ம்ஹூம்.. அமைதிப் படை மாதிரி இல்லை..' என நிராகரிப்பட்டது.

'பிஸ்தா' என்ற YOUTUBEல் வெளியான பாடல் மூலம் படம் எப்போபா ரிலீஸ் என்று கேட்க வைத்த படம் 'நேரம்'. மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே வரவேற்பைப் பெற்றது.

சசிகுமார் நடிப்பில் வெளியான 'குட்டிப்புலி', விமர்சகர்கள் மத்தியில் எடுத்த கதையே தான் எடுத்திருக்கிறார்கள் என்று பேச்சு நிலவினாலும், வசூலில் பாய்ச்சல் காட்டியது 'குட்டிப்புலி'

ஜூன் : திக்குமுக்காடிய தில்லு முல்லுவும்...  அம்பேலான அன்னக்கொடியும்


'தீயா வேலை செய்யணும் குமாரு', 'தில்லு முல்லு', 'அன்னக்கொடி' ஆகிய படங்கள் ஜுன் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'தில்லு முல்லு' ஆகியவை காமெடியை நம்பி களமிறங்க, 'தீயா வேலை செய்யணும் குமாரு' மட்டுமே வரவேற்பைப் பெற்றது. ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படத்தினை ரீமேக் செய்து வெளியிட்டார்கள். ஆனால் ரஜினி நடித்தளவிற்கு சிவா நடிப்பு எடுபடாமல் பெட்டிக்குள் படுத்து விட்டது.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'அன்னக்கொடி' விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் வரவேற்பை இழந்து, 2013ல் படுதோல்வியை சந்தித்தது.

ஜூலை : ரஹ்மானுக்கு மரியாதை கொடுத்த மரியான்

'சிங்கம் 2', 'மரியான்', 'பட்டத்து யானை' ஆகிய படங்கள் ஜுலை மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். சூர்யா நடித்த 'சிங்கம்' படத்தின் இரண்டாம் பாகமாக 'சிங்கம் 2' வெளியானது. பரபரப்பான திரைக்கதை, பாட்டிற்கு டான்ஸ் ஆட அனுஷ்கா, காமெடிக்கு கைகொடுக்க சந்தானம், இளசுகளைக் கவர ஹன்சிகா, பரபர காட்சியமைப்பு, விறுவிறு வசனம் என பார்வையாளர்களை யோசிக்கக் கூட நேரம் கொடுக்காமல், வசூலை அள்ளியது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'மரியான்' வெளியானது. 'நீ வரணும் பனி', 'காசா இல்லடா...' என கலங்கடித்த தனுஷின் நடிப்பு, 'மரியான்.. உனக்காக காத்துட்டுருப்பேன்டா', 'வந்துரு வந்துரு' என்று அசத்தலான பார்வதி நடிப்பு, 'இன்னும் கொஞ்சம் நேரம்', 'எங்கே போன ராசா', 'கடல் ராசா நான்' என ஏ.ஆர்.ராஹ்மானின் துள்ளலான இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருந்தாலும் திரைக்கதை அமைப்பில் சொதுப்பலாகி, தோல்வியடைந்த படம்.

படம் தோல்வியடைந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கொண்டாடப்பட்டு, ‘மரியான்’ பாடல்கள் இன்றளவும் விரும்பிக் கேட்கப்படுகிறது.

விஷால் நடிப்பில் எதிர்பார்க்கப்பட 'பட்டத்து யானை' வெளியாகி தோல்வியடைந்தது.

ஆகஸ்ட் : விஜய்யை அதிரவைத்த ஆகஸ்ட்


'ஐந்து ஐந்து ஐந்து', 'ஆதலால் காதல் செய்வீர்', 'தலைவா', 'தேசிங்கு ராஜா', 'தங்க மீன்கள்' ஆகிய படங்கள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். வித்தியாசமான திரைக்கதை அமைப்புடன் வெளியான 'ஐந்து ஐந்து ஐந்து' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியானது 'ஆதலால் காதல் செய்வீர்'. தற்போதுள்ள இளைஞர்களின் வாழ்க்கைமுறை, யுவனின் மனதை கொள்ளை கொள்ளும் இசை என வரவேற்பைப் பெற்றது. ராமின் இயக்கத்தில் வெளியான 'தங்க மீன்கள்' போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், இந்தியன் பனோராமாவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றது.

'தலைவா' திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்று பெரும் சர்ச்சையில் சிக்கி, தயாரிப்பாளர் செய்தியாளர்கள் மத்தியில் அழுது, படத்தினை வெளியிட தமிழக அரசு உதவிட வேண்டும் என்ற விஜய் வீடியோ மூலம் பேசி என பலதரப்பட்ட முயற்சிக்கு பின் வெளியான படம் 'தலைவா'. போதிய வரவேற்பை பெறவில்லை, வசூலையும் பெறவில்லை.

எழில் இயக்கத்தில் விமல், சூரி நடிப்பில் வெளியான 'தேசிங்குராஜா' பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்தது. சிறிய பட்ஜெட்டில் வெளியாகி சூரியை முன்னணி காமெடி ராஜாவாக ஆக்கியது இந்த 'தேசிங்கு ராஜா'

செப்டம்பர் : சங்கம் தந்த செப்டம்பர்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மூடர் கூடம்', '6 மெழுகுவர்த்திகள்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'ராஜா ராணி' ஆகிய படங்கள் செப்டம்பர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள். 'மூடர் கூடம்', '6 மெழுகுவர்த்திகள்', 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' ஆகிய மூன்று படங்களுமே விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட படம்.

நவீனின் அசத்தலான திரைக்கதை அமைப்பில் வெளியான 'மூடர் கூடம்', வி.சி.துரையின் உருக வைக்கும் திரைக்கதை, தூங்காமல் கண்ணுக்கு கீழே வீங்க வைத்து நடித்த ஷாம் ஆகிய வகையில் '6 மெழுகுவர்த்திகள்', மிஷ்கின் நடிப்பு, இயக்கத்தில் வெளியான 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' என விமர்சகர்கள் பாராட்டினாலும் மூன்றில் எந்த படமுமே வசூல் ரீதியாக வெற்றி பெறாதது சோகமே.

சிவகார்த்திகேயன் - சூரி - சத்யராஜ் காமெடி கதகளியில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வசூல் ரிதியில் பல முன்னணி நடிகர்களை கலங்கடித்தது. 'சிங்கம் 2' படத்தின் முதல் நாள் வசூலை பல இடங்களில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' முந்தியது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதிவ்யா இப்படத்தில் அறிமுகமாகி, ஜி.வி. பிரகாஷ் உடன்’பென்சில்’, அதர்வாவுடன் ‘ஈட்டி’, சுசீந்திரன் இயக்கத்தில் ‘வீரதீரசூரன்’ என படபடவென அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார். பலரையும் சந்தோஷப்படுத்தியது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

'மெளனராகம்' சாயலில் வெளியாகி இளைஞர்கள் கொண்டாடிய படம் 'ராஜா ராணி'. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் ஆகியோரின் பாத்திரப் படைப்பு, ஜி.வி.பிரகாஷின் இசை, ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு என ரசிகர்கள் மனதில் ‘ராஜா ராணி’ சிம்மாசனமிட்டது . குறிப்பாக, நீண்ட நாட்கள் கழித்து தமிழில் நாயகியாக நயன்தாரா நடித்து, அவரது ரசிகர்களை மகிழ்வித்தார்.

அக்டோபர் :அசத்தலான ஆரம்பம்.. ஆசைப்பட்டதை அடையாத பாலகுமாரன்


'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நய்யாண்டி', 'வணக்கம் சென்னை', 'ஆரம்பம்' ஆகிய படங்கள் அக்டோபர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள்.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி,எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்தது. இதனால் விஜய் சேதுபதி ஹாப்பி அண்ணாச்சியாக இருக்கிறார். தனுஷ் நடித்து, நஸ்ரியாவின் பஞ்சாயத்திற்கு இடையே வெளியான 'நய்யாண்டி', படம் பார்க்க வருபவர்களை நய்யாண்டி செய்தது.

அனிருத்தின் ஹிட்டடித்த இசையால் பெரும் எதிர்பார்க்கப்பட்ட 'வணக்கம் சென்னை', மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே வரவேற்பை பெற்றது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான 'ஆரம்பம்' வசூல் ரீதியில் கோடிகளை அள்ளியது. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த படத்தில் விமர்சகர்கள் கூறினாலும், அஜித் இருக்காரு.. அவருக்கு நாங்க இருக்கோம் என்று படம் பார்த்தார்கள் அஜித் ரசிகர்கள்.

நவம்பர் : தடைகளைத் தாண்ட வைத்த பாண்டிய நாடு

'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'பாண்டியநாடு', 'வில்லா (பீட்சா 2)', 'இரண்டாம் உலகம்', 'விடியும் முன்' ஆகிய படங்கள் நவம்பர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள்.

கார்த்தி - ராஜேஷ் - சந்தானம் கூட்டணியில் வெளியான 'ஆல் இன் ஆல் அழகுராஜா', அழுக்கு ராஜாவாக பெட்டிக்குள் முடங்கிக் கொண்டது. சுசீந்திரன் - விஷால் கூட்டணியில் வெளியான 'பாண்டியநாடு' விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, விஷால் எதிர்நோக்கிய ஹிட்டை பரிசாக அளித்தது. தொடர்ந்த வந்த தோல்விப்படத் தடைகளை விஷால் உடைத்தார்.

'பீட்சா' படத்தின் அடுத்த பாகமாக வெளியான 'வில்லா', முதல் பாகம் பெற்ற அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

செல்வராகவன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட 'இரண்டாம் உலகம்' வெளியானது. ஆனால், ரசிகர்களை எந்த உலகத்தில் இருக்கிறோம் நாம் என்று யோசிக்க வைத்து, சலிப்புடன் திருப்பி அனுப்பியது. 2013ல் படுதோல்வி அடைந்த படங்கள் ஒன்றாகவும் பெயர் பெற்றது.

பூஜா நடிப்பில் வெளியான 'விடியும் முன்' விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், வசூலில் வானம் விடியவில்லை.

டிசம்பர் : கல்யாண சாப்பாடும், பிரியாணியும்

'கல்யாண சமையல் சாதம்', 'பிரியாணி', 'என்றென்றும் புன்னகை', 'தலைமுறைகள்', 'மதயானைக்கூட்டம்' ஆகிய படங்கள் டிசம்பர் மாதத்தில் வெளியான முக்கியமான படங்கள்.

'கல்யாண சமையல் சாதம்' ADULT COMEDY என்ற வகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. வெங்கட்பிரபு - கார்த்தி இணைப்பில் வெளியான 'பிரியாணி' வெளியானது. கார்த்தியின் 'அலெக்ஸ் பாண்டியன்', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படங்களோடு ஒப்பீடு செய்து அதற்கு 'பிரியாணி' பரவாயில்லை என்று பேச்சுகள் நிலவுகின்றன.

அஹ்மத் இயக்கத்தில் வெளியான 'என்றென்றும் புன்னகை', படம் வெளியான நாளில் கூட்டம் இல்லையென்றாலும் இளைஞர்களுக்கு படம் பிடித்து WORD OF MOUTH மூலம் படத்திற்கு கூட்டம் அதிகரித்தது. பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான 'தலைமுறைகள்' விமர்சகர்கள் பாராட்டைப் பெற்றாலும், வசூலில் வெற்றி பெறவில்லை.

விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கும் 'மதயானைக்கூட்டம்' பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு கூட்டத்தை சேர்த்து இருக்கிறது என்பது இனிமேல் தான் தெரியும்.

0 comments:

Post a Comment