Wednesday, 1 January 2014

பெயர் வைப்பதில் கில்லாடி தமிழர்கள்...!




பாலங்கள், சாலைகள், கட்டடங்கள் என அனைத்திற்கும் பெயர் வைப்பதில் கில்லாடிகள் தமிழர்கள். பெயர் வைக்கும் போது எதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை பற்றி கவலை கொள்வதும் கிடையாது.

குறிப்பாக திராவிட ஆட்சிக்காலத்தில் இந்த பெயர் வைக்கும் வைபவம் அரசின் சாதனை பட்டியலாகவே பார்க்கப்படுகிறது.ஆனால் இந்த பெயர் வைக்கும் படலம் விவசாயத்துறையையும் விட்டு வைக்க வில்லை.

நெல் பயிரையும் அலையாய் அலைக்கழித்து இருக்கின்றனர். நமது அரசியல்வாதிகளின் நகைச்சுவை. நெல் சாகுபடி முறையில் புதிய தொழில்நுட்பம் திருந்திய நெல் சாகுபடி. குறைவான தண்ணீரில் கூடுதல் மகசூல் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த தொழில் நுட்பம் ஆங்கிலத்தில் System of Rice Intensification என்றழைக்கப்படுகிறது.

1970களிலேயே இதற்கான ஆய்வுகள் நடைபெற்ற போதும், அமெரிக்காவின் நியூார்க்கின் இதாகாவில் உள்ள கார்னெல் பல்கலைகழகம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. உணவு, வேளாண்மை, மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைவர் நார்மன் உபாஃப் இதனை உலகெங்கும் எடுத்துச் சென்றார்.

2005களில் தான் ஆசியாவில் திருந்திய நெல் சாகுபடி வளர்ந்தது. தமிழகத்திலும் சில ஆண்டுகளாகவே பிரபலமடைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, திருந்திய நெல் சாகுபடி குறித்து விரிவாக காணொளி தொகுப்பு ஒன்றை தமிழக வேளாண்மை துறை தயாரித்துள்ளது.

 அரை மணிநேரத்திற்கும் மேலாக ஒளிபரப்பப் தக்க வகையிலான இந்த காணொளி தொகுப்பை அப்போதைய முதலமைச்சரிடம் காண்பிப்பதற்காக சில நிமிடங்கள் கொண்ட தொகுப்பாக குறைத்து முதலமைச்சரிடம் காண்பித்துள்ளது. திருந்திய நெல் சாகுபடி தொடர்பான அந்த காணொளியை பார்த்த முதலமைச்சர் தான் பிறந்த தஞ்சை தரணிக்கு இது உபயோகமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

ரொம்பவும் மகிழ்ந்து போன அவரிடம் முழு படத்தையும் காண்பித்து இருக்கிறார்கள். முடிவில், “இந்த முறையில் நெல் சாகுபடி செய்தால் மகசூல் அதிகரிக்கும். இதனால் செழுமை ஏற்படும். அதனால் செழுமை நெல் சாகுபடி என்று பெயர் வைங்கய்யா,” என்று சொல்லி இருக்கிறார். System of Rice Intensification என்பதற்கு திருந்திய நெல் சாகுபடி என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

அப்படி தான் வேளாண் பல்கலைக்கழகம் பெயர் வைத்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சரோ அதனால என்னய்யா? கடைசியில விவசாயிகளுக்கு செழிப்பு தானே வரும் செழுமை நெல் சாகுபடினு பெயர் வைய்ங்கய்யா. தமிழ்ல அது தான் சரியா வரும் என்று சொல்லியிருக்கிறார். சரி என்ன செய்வது சொல்லியது முதலமைச்சர் ஆயிற்றே! புதிய பெயர் சூட்டப்பட்டு விட்டது.

பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தமிழக வேளாண் துறையும் செழுமை நெல் சாகுபடி என்று புதிய நாமகரணம் சூட்டியது. வேளாண் பல்கலை முதல் உலக நெல் ஆராய்ச்சி நிலையம் வரை நெல் சாகுபடி தொழில்நுட்பத்திற்கு தமிழகத்தில் பயன்படுத்தும் பெயர் செழுமை நெல் சாகுபடி என்று தெரிவிக்கப்பட்டது.

 சில மாதங்கள் உருண்டோடின. தமிழகத்தில் செழுமை நெல் சாகுபடி தொழல் நுட்பத்தில் எவ்வளவு நிலம் பயிரிடப்படுகிறது. என்பது போன்ற விவரங்கள் முதலமைச்சரிடம் தரப்பட்டன. அதனை பார்த்துக் கொண்டிருந்த முதலமைச்சர் திடீர் யோசனையில் ஆழ்ந்தார். அப்போது ராஜ ராஜ சோழனின் சதய விழா நடைபெற்ற காலம். ஏன்ய்யா பேசாம செழுமை நெல் சாகுபடிங்கிறதுக்கு பதிலா ராஜாராஜன் 1000ம் னு என் பெயர் வைக்க கூடாது என்று கேட்டிருக்கிறார்.

நெல் என்றால் தஞ்சை, தஞ்சை என்றால் ராஜ ராஜ சோழன், அதனால் ராஜ ராஜன் பெயர் வைத்து விடலாம் என்று கூறியிருக்கிறார். அதிகாரிகளோ அதிர்ந்து போய் விட்டார்கள். ஐயா இது வெறும் தொழில்நுட்பம் தான். இதனை தமிழில் எப்படி அழைக்க வேண்டும் என்பது தான் பிரச்னை. இது புது ரக நெல் கிடையாது. கோ 40, அம்பை 16 என்று நெல் ரகங்களுக்கு பெயர் வைப்பது போன்று இதற்கு பெயர் வைக்க முடியாது என்று தெரிவித்து இருக்கின்றனர்.

அதனால என்னய்ய தமிழகத்தில நாம தானய்யா முடிவு செய்யணும். பேசமா ராஜ ராஜன் 1000ம்னு பெயர் வையுங்க என்று முடிவாக கூறி விட்டார் முதலமைச்சர். வேறு என்ன செய்வது சொல்லியது முதலமைச்சராயிற்றே. ராஜ ராஜன் 1000ம் என்று பெயர் சூட்டப்பட்டது. திருந்திய நெல் சாகுபடி, செழுமை நெல் சாகுபடியாகி, ராஜ ராஜன் 1000 ஆக பெயர் மாறியது. பிறகு ஆட்சி மாறியது. கட்டடங்கள் முதல் திட்டங்கள் வரை அனைத்திற்கும் பெயர் மாற்றம் நடந்தது.

அதுபோலவே ராஜ ராஜன் 1000ம் என்ற பெயரும் மாற்றப்பட்டது. புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்தது போல மீண்டும் திருந்திய நெல் சாகுபடி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வேளாண் துறை அதிகாரிகளும், வேளாண் பல்கலைகழகமும், விவசாயிகளும் என்ன செய்வது? மீண்டும் திருந்திய நெல் சாகுபடியானது System of Rice Intensification.

0 comments:

Post a Comment