Saturday, 19 April 2014

அழகாகக் கோபப்படுங்கள்!




பெரும்பாலும் காரணம் இல்லாமல் கோபம் வருவது இல்லை; ஆனால், மிக அரிதாகத்தான் அது நியாயமான காரணத்துக்காக வருகிறது - பெஞ்சமின் ஃபிராங்கிளின் வாரத்தை இது. ஆக, கோபம் என்பது மீண்டும் மீண்டும் ஓர் எதிர்மறை எண்ணமே என்பது தெளிவாகிறது. எண்ணங்கள் இல்லாமல் மனித மனம் கிடையாது. ஆகவே, கோபப்படுங்கள்; ஆனால், அதற்கு ஆட்படாதீர்கள். அதாவது அழகாகக் கோபப்படுங்கள்.

உளவியல் துறையில் கோபத்தை நிர்வகிக்க (Anger management) பயிற்சி அளிப்பதற்காகவே சிறப்பு வல்லுநர்கள் இருக்கிறர்கள். இவர்களிடம் பெரும் நிறுவனத்தின் உரிமையாளர்களும் உயர் அதிகாரிகளும் தங்களது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சக நிறுவத்தினரிடம் கோபப்படாமல் நடந்துகொள்வது எப்படி? அல்லது எந்த விகிதாச்சாரங்களில் கோபப்பட வேண்டும் என்கிற பயிற்சிகளைப் பெறுகிறார்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டாம்; ஆனால், அதை வெளியேற்றும் விதங்களை, விகிதாச்சாரங்களை மாற்றி அமையுங்கள். அப்போதுதான் அக்கோபத்துக்கான பலன் கிடைக்கும். அல்லது குறைந்தபட்சம் அதனால் நேரும் எதிர்மறை விளைவுகள் தவிர்க்கப்படும். அதற்கு சில உபயோகமான யுக்திகளையும் சொல்லித்தருகிறது உளவியல்.

கோபம் ஒற்றை உணர்வு அல்ல. ஒரு கோபம் இன்னொன்றை, இன்னொன்று மற்றொன்றை என அது ஒரு சங்கிலித் தொடர்போல உருவாகிறது. அமைதியான குளத்தில் கல்லெறிவதுபோது ஏற்படும் அலைகள் போன்றது கோபம். ஒருமுறை கல் எறிவதுடன் நிறுத்திக்கொண்டால் அதுவாக அடங்கிவிடும். திரும்பத் திரும்ப கல் எறிந்தால் அடங்கவே அடங்காது. எனவே, கோபப்படும் வகையில் ஒரு நிகழ்வு நடந்த பின்பு திரும்பவும் அதையே நினைக்காதீர்கள். நினைக்க, நினைக்க கோபம் தனக்கான நியாயத்தைக் கற்பித்துக்கொண்டு பல்கிப் பெருகும்.

அப்படியும் அந்நிகழ்வை மறக்க முடியவில்லையா? உடனே கிளம்புங்கள் உல்லாசச் சுற்றுலாவுக்கு. ஆனால், இந்தச் சுற்றுலாவுக்கு பைசா செலவு கிடையாது. பஸ் பிடிக்கவும் தேவையில்லை. இது மன வெளியில் மேற்கொள்ளப்படும் பயணம் (Mental tour). உங்கள் குழந்தையின் முதல் முத்தமோ காதலியின் கன்னங்களோ உங்களின் சந்தோஷத் தருணங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.

கோபம் வருகையில் ஒரு செய்முறை. கண்ணாடி முன்பு நின்று கோபப்படுங்கள். உங்கள் முக பாவனைகளைப் பாருங்கள். ஒன்று, பயந்து பதறி விடுவீர்கள். இல்லை, அது பயங்கர காமெடியாக இருக்கும். சிரித்துவிடுவீர்கள். போயே போச்சு கோபம்!

நிகழ்வு நடந்த இடத்தில் இருந்து உடனே கிளம்பிவிடுங்கள். ஆனால், நண்பருடன் அல்ல, தனியாக. ஏனெனில் உடன் வருபவர் உங்களுக்கு வக்காலத்து வாங்கி உங்கள் கோபத்துக்கு எண்ணைய் வார்க்கலாம்.

கோபம் வருகையில் ஜோராக ஒரு நடைபயிற்சி மேற்கொள்ளலாம். தண்டால் எடுப்பது, பளு தூக்குவது போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பிடித்தமான விளையாட்டுகளை விளையாடலாம். இதுபோன்ற சமயங்களில் கோபத்தின் காரணமாக வெளியேறும் மனச்சோர்வுக்கான ஹார்மோன்கள் குறைந்து, மகிழ்ச்சிக்கான எண்டோர்பின்கள் சுரக்கத் தொடங்கும்.

தாமதப்படுத்துங்கள். கோப உணர்வைக் காட்டத் துடிப்பதில் நீங்கள் காட்டும் ஒரு நிமிடத் தாமதம்கூட உங்கள் வாழ்வின் போக்கையே மாற்றக்கூடும். இதை நிருபிக்கப் பெரியதாக அறிவியல் ஆய்வுகள் ஏதும் தேவையில்லை. அடுத்த முறை யார் மீதேனும் உங்களுக்கு கடும் கோபம் ஏற்படுகையில் உடனடியாக அவரை மனதுக்குள் திட்டுங்கள். ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, முடிந்தால் மனவெளிப் பயணம் போய்விட்டு அவரை அழைத்துத் திட்டுங்கள். கோபம் பாதியாகக் குறைந்திருப்பதை உணர்வீர்கள்.

எதிராளியின் இடத்தில் நின்று யோசியுங்கள். சமானியர்களும் மகான்களாகும் வாய்ப்பு இது. அடிப்படை மனிதப் பண்பு, மனித நேயம் இது. ஒவ்வொரு முறையும் கோபப்படும்போது எதிராளியின் இடத்தில் நின்று சிந்திக்கும்போது ஒன்று அவரது செய்கையின் நியாயம் புரியும். நீங்களும் அதுபோல் நடந்துகொண்ட சந்தர்ப்பங்கள் நினைவுக்கு வரும். காணாமல் போகும் கோபம். அல்லது எதிராளியின் தவறு பிடிபடும். மன்னிப்பு எதிராளிக்கு மட்டுமல்ல; உங்களுக்கே அது ஓர் அருமருந்து. மன்னியுங்கள்!

0 comments:

Post a Comment