Friday, 29 November 2013

துபாய் என்ற அற்புதம்!


துபாய் என்ற ஒரு நகரம் இல்லாமல் போயிருந்தால் இன்றைக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலத்தில் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அடித்தட்டு மட்டும் நடுத்தர மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் கேள்விக்குறியாகியிருந்திருக்கும்.

பல மலையாளிகளும் தமிழர்களும் துபாயின் திர்ஹம்ஸை ஊதியமாகப் பெற்று..... குடிசை வீடுகளை மாடி வீடுகளாக மாற்றி இருக்கின்றனர்...., தாயின், தந்தையின் கனவுகளை நிறைவேற்றி இருக்கின்றனர். வறுமையிலிருந்த எத்தனையோ சகோதரர்கள் தங்களின் சகோதரிகளுக்கு மணமுடித்து வைத்திருக்கின்றனர்.....

அமீரகம் ஆன்மீகத்தோடு நெருங்கிய தொடர்புடைய நேர்மறை அதிர்வுகள் கொண்ட பூமி...! இங்கே உழைத்து பெறும் ஒவ்வொரு திர்ஹமும் பரக்கத்தானது. சிறு ஊதியம் பெற்றாலும் அவனால் எல்லாவற்றையும் ஓரளவிற்கு அவன் சொந்த ஊரில் நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது.

உலகின் பல்வேறு பகுதியிலிருந்து வந்து குடியமர்ந்திருக்கும் அத்தனை மக்களையும் மரியாதையுடனும், அன்புடனும் பாரபட்சமின்றி நடத்தும் அமீரகத்தின் அன்பு மிகக் கம்பீரமானது....! பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் கொடுக்கும் முன்னுரிமையை, மரியாதையை இந்த உலகத்தின் இன்ன பிற நாடுகள் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும்....!

இதோ கடந்த சிலமாதங்களாக ஒட்டு மொத்த அமீரகத்தின் அத்தனை குடிமக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த எக்ஸ்போ 2020ல் துபாய் வென்றிருக்கிறது. அறிவால் இணைவோம் புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம் (Connecting minds creating the future) என்ற கருத்தாக்கத்தோடு களத்தில் நின்ற துபாயின் வெற்றி திடமான தொலைநோக்குப் பார்வை கொண்ட தெளிவான தலைமைத்துவத்தின் வெற்றி.

ஏற்கெனவே அசுரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் துபாய் இன்னும் வேகமாக இயங்கப் போகிறது. அந்த பிரம்மாண்ட உழைப்பு உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்புகளால் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த மனிதர்களின் வாழ்க்கை வளம் பெறப்போகிறது என்பது உறுதி....!

0 comments:

Post a Comment