Thursday, 31 October 2013

திரையுலகில் சரித்திர, புராண படங்கள் மீண்டும் ஆதிக்கம்!

திரையுலகில் சரித்திர, புராண படங்கள் மீண்டும் ஆதிக்கம்
திரையுலகில் சரித்திர புராண படங்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க நடிகர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ரஜினியின் கோச்சடையானும், செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படமும் இதே கதையம்சத்தில் வருகின்றன. தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிப்பில் தயாராகும் ருத்ரமாதேவி படமும் சரித்திர கதையம்சம் கொண்டது.

கோச்சடையான் படத்தில் ரஜினி மன்னன், இளவரசன் என இரு வேடங்களில் வருகிறார். புராண காலத்தில் சிவ பக்தனாக வாழ்ந்த ஒரு அரசனை பற்றிய கதையே இப்படம். மன்னர் காலத்து ஆடை அணிகலன்கள், யுத்த கருவிகள் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவின் கெட்டப் காட்டுவாசியை நினைவூட்டுவதுபோல் அமைந்துள்ளது. அனுஷ்கா வாள் சண்டையிடும் வீரப்பெண் போல் தோற்றமளிக்கிறார். ஏற்கனவே செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தையும் இதே சாயலில்தான் எடுத்து ரிலீஸ் செய்தார்.

ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்கா மகாராணி வேடத்தில் வருகிறார். சரித்திர காலத்தில் வீரதிரத்தோடு வாழ்ந்த ஒரு ராணியை பற்றிய கதையே இப்படம். ஏற்கனவே அருந்ததி படம் அனுஷ்காவுக்கு பெயர் வாங்கி கொடுத்ததால் இப்படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

தெலுங்கில் தயாரான மகதீரா சரித்திர படமும் நயன்தாரா நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் புராண படமும் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இப்படங்கள் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.

பிருதிவிராஜ், பிரபுதேவா, ஜெனிலியா, நித்யாமேனன் நடித்த உருமி படமும் சரித்திர கால கதையம்சம் கொண்டது. இப்படம் தமிழ், மலையாளத்தில் வெளியானது. இது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில், வரவேற்பு ஏற்பட்டு உள்ளதால் நிறைய படங்கள் இனிமேல் இதே கதைசம்சத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலின் மருதநாயகம் படத்தையும், ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

0 comments:

Post a Comment