Tuesday, 22 October 2013

“சூர்யா எல்லாம் எனக்கு அண்ணனா?” – கார்த்தி ஸ்பெஷல் பேட்டி!

இந்த தீபாவளிதான் கார்த்திக்கு நிஜமான தலை தீபாவளியாம்.காரணம்- இந்த தீபாவளிக்குத்தான் அவர் நடித்த “ஆல் இன் ஆல் அழகு ராஜா” வெளியாகிறது. அவருக்கு முதல் தீபாவளி படம் இதுதான்.

எனவே முன் எப்போதும் இல்லாத உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இந்த ஆண்டு தீபாவளியை எதிர் கொள்கிறார் கார்த்தி.

21 - karthi interview
 
இனி கார்த்தியின் நேர்காணல்…

இந்த தீபாவளி உங்களுக்கு ஸ்பெஷல் தானே?

“நான் எத்தனையோ தீபாவளியை பார்த்திருக்கிறேன்.இந்த தீபாவளி எனக்கு நிச்சயமாக ஸ்பெஷல்தான். இப்போதுதான் இந்த ஆண்டு தான் எனக்கு தீபாவளி ரிலீஸ் படம் வருகிறது. அதனால் மனசுக்குள் எதிர்பார்ப்போடும் பரபரப்போடும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

இத்தனை ஆண்டுகளில் எட்டே படங்கள் போதுமா?

“ஒரு ஹீரோவாக பார்க்கும் போது நான் இதுவரை 8 படங்கள் தான் முடித்து இருக்கிறேன். என் கூட நடித்த கஜால் அகர்வால் நாலே வருஷத்தில் 30 படங்கள் முடித்து அனுபவசாலியாகி விட்டார் பாருங்கள் நம்மால் எல்லாம் அவ்வளவு படம் செய்ய முடியாது. ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு மூணு வருஷம் ஆனது. இது போன்று சில நேரம் தாமதமாகி பட எண்ணிக்கையைக் குறைத்து விடுகிறது. இதுவும் ஒரு அனுபவம் தானே?

 படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

“கதை கேட்டுதான். அப்படி என்ன பெரிதாக கதை கேட்கிறீங்க என்று நீங்கள் கேட்கலாம். எனக்குப் பிடித்த மாதிரி நான் பொருந்துகிற மாதிரி கதை வரும் போது கேட்கிறேன். முதலில் எனக்கு பிடிக்க வேண்டும். முதலில் அதன் மீது நம்பிக்கை வர வேண்டும். என் கணிப்பு தவறாக கூட இருக்கலாம். இருந்தாலும் செய்வதை பிடித்தமுடன் செய்கிறேன்.

நீங்கள் அம்மா செல்லமா? அப்பா செல்லமா?

“உண்மையை சொல்லச் சொன்னால் நான் யாருடைய செல்லமும் இல்லை. நான் மூத்த பிள்ளையும் இல்லை கடைக் குட்டியும் இல்லை. மூத்த பிள்ளை அண்ணன் அம்மா செல்லம். கடைக்குட்டி தங்கை அப்பா செல்லம். இடையில் மாட்டிக் கொண்டது நான்.

எனக்கு எதுவும் தேவை என்றால் மூத்த பிள்ளை உங்க பிள்ளை… இளைய பிள்ளை செல்லப் பிள்ளை… நடுவில் பிறந்த பிள்ளை நான் மட்டும் எடுப்பார் கைப்பிள்ளையா என்று செண்டிமென்டாகப் பேசி காரியம் சாதிப்பது உண்டு.இப்படி அழுது பைக் கூட வாங்கி இருக்கிறேன்”.

 உங்கள் அப்பாவிடம் பிடித்தது…?

“எங்களை, ஒரு நடிகர்… பிரபலமானவர் வீட்டுப் பிள்ளை என்பது போல் வளர்க்கவில்லை. எல்லாக் கஷ்டமும் தெரிய வைத்துதான் வளர்த்தார். சாதாரண நடுத்தர வர்க்க குடும்பம் போலவே நாங்கள் வளர்ந்தோம். மிடில் கிளாஸ் பசங்களைப் போல ஸ்கூலுக்கு பஸ்ஸில் தான் போனோம். உலகம் தெரியாமல் கண்ணை மூடி வளர வில்லை நாங்கள். நான் பத்தாம் வகுப்பு போகும் போதுதான் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். காரில் நாங்கள் ஸ்கூல் போனதில்லை. எங்களை பாகுபாடு இல்லாமல் பாரபட்சம் பார்க்காமல் ஒப்பிட்டுப் பார்க்காமல் வளர்த்தார், நடத்தினார்.

அண்ணன் சீரியஸான கேரக்டரில் நடிக்கிறார். நீங்களோ இப்போது ஜாலி ரூட்டில் போகிறீர்களே?

“என் முதல் படம் “பருத்தி வீரன்” அது படு சீரியஸாக பேசப்பட்ட படம். நானா அது என்று பலருக்கும் அதிர்ச்சி தந்த படம். எனக்கும் அப்படி நடந்தது ஷாக் தான். நான் அமெரிக்காவில் படித்தவன். சத்தம் போட்டுப் பேசுவது நாகரிக குறைவு என்று அறிந்தவன்… பழகியவன். என்னை கூப்பிட்டு சத்தம் போட்டுப் பேச வைத்து தொடை தெரிய லுங்கி கட்டி… எனக்கே புதியதாக இருந்த அனுபவம் அது.

இப்போ வருகிற படங்கள் ஜாலி எண்டர்டெயினராக இருக்கிறது.. போகப் போக மாற்றம் வரும். ஜனங்களுக்கு எண்டர்டெயினராக இருக்கவே எனக்குப் பிடிக்கும். அந்தப் பாதையில் என் பணியும் தொடரும். பொங்கல் அன்று வரவிருக்கும் “பிரியாணி” நடித்துக் கொண்டிருக்கும் ரஞ்சித் படம் எல்லாமே மாறுப்பட்ட கார்த்தியை காட்டும் படமாக இருக்கும்.

அண்ணன் சூர்யா பற்றி?

“உண்மையைச் சொன்னால் வேடிக்கையாக இருக்கும். சின்ன வயதில் எனக்கும் அண்ணனுக்கும் ஆகவே ஆகாது.இவன் எல்லாம் எனக்கு அண்ணனா? ஏன்டா எனக்குன்னு இப்படி ஒரு அண்ணன் இருக்கான்னு நினைப்பேன்.எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். நான் குண்டாக இருப்பேன். இருந்தாலும் நான் தோற்று விடுவேன். அண்ணன் அவ்வளவு வேகம்.என் சைக்கிளை என் பைக்கை எடுத்து ஓட்டினால் எனக்குப் பிடிக்காது. ஆனால் அண்ணன் ஒன்றையும் விடுவதில்லை. என் சட்டையை கூட பழசாக்காமல் வைத்து இருப்பேன். ஆனால் என் சட்டையை விட்டு வைப்பதில்லை.

என்ன வேடிக்கை என்றால் என் சட்டையை அண்ணன் போடலாம். அவர் சட்டை எனக்கு சிறியதாக இருக்கும். இரண்டு பேரும் சேருவது ஒரே ஒரு விஷயத்திற்காகத்தான் சேர்ந்து ப்ரூஸ்லீ, ஜெட்லீ படம் பார்ப்போம். இந்தப் படங்களை எல்லாம் பார்த்து விட்டு சும்மா இருக்க முடியுமா?அன்று இரவு வீட்டுக்கு வந்தவுடன் சண்டை வரும். கட்டிப் புரண்டு, திட்டிக்கொண்டு உருளுவோம்.

நான் அமெரிக்கா போய் படித்து ஊர் வந்து பார்த்தால் வீடே வெறிச் சென்று இருந்தது. பேசக் கூட ஆளில்லை.முதலில் திரும்பி வந்த போது அவர் ஒரு நடிகராக வளர்ந்திருந்தார். பிதாமகன் ஷூட்டிங்கில் இருந்தார். கும்பகோணம் போய் பார்த்தேன். அடையாளமே தெரியவில்லை.

இவர் பழைய அண்ணனா என்று ஆச்சர்யம். அந்த அளவுக்கு மென்மையுள்ளவராக மாறியிருந்தார். நான், பருத்தி வீரன் முடித்ததும் எனக்கு கார் வாங்கிக் கொடுத்தார். ஒரு சைக்கிள் விஷயத்தில் கட்டிப்புரண்ட அண்ணனா இவர் என ஆச்சர்யமாக இருந்தது. அப்போது அந்த அளவுக்கு பொறுப்புள்ளவராக மாறி இருந்தார்.


 வீட்டில் உங்கள் பொறுப்பு என்ன?

எங்கள் வீட்டு விவகாரங்களை நான் பொறுப்புடன் பார்ப்பேன். வெளியுறவுத்துறை இலாகா அண்ணன் பார்ப்பார். என் தங்கையின் திருமணத்தின் போது எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு பார்த்துப் பார்த்து பொறுப்புடன் அவர் வேலை செய்தது எனக்கு பிரமிப்பாக இருந்தது.

அமெரிக்காவில் படித்த சினிமா – பார்த்த உலக சினிமா உள்ளூர் சினிமா வாழ்க்கைக்கு உதவுகிறதா?

மணி சார் சொல்வார். அங்குள்ள சினிமா வேறு. பார்க்கிற மக்கள் வேறு. அவர்கள் கலையாக பார்க்கிறார்கள். இங்கு வருகிற மக்கள் மன அழுத்தம் போக்க வருகிறவர்கள். பல கவலைகளை மறக்க தியேட்டர் வருகிறவர்கள். இவர்களுக்கு என்டர்டெயினிங் தேவை. அப்படிப்பட்ட படங்கள்தான் இங்கு வேண்டும் என்பார்.அதையே நானும் ஏற்றுக் கொண்டேன்.சினிமாவைப் புரிந்து கொள்ள படிப்பு உதவும் மக்களைப் புரிந்துதான் படமாக்க வேண்டும். மக்களைப் புரிந்து கொள்ள அனுபவம்தான் உதவும்

0 comments:

Post a Comment