Monday, 21 October 2013

சென்னையிலுள்ள பழமையான கட்டடங்களுக்கு வரைபடங்கள் தயாரிப்பு!

சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் கோட்டை, சேப்பாக்கத்தில் உள்ள பழமையான கட்டடங்கள் மற்றும் எக்மோர் அருங்காட்சியகம் போன்றவை அனைத்தும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. இந்தக் கட்டடங்களுக்கு உரிய வரைபடங்கள் பொதுப்பணித் துறையிடமோ அல்லது அவற்றை மேற்பார்வை செய்து வரும் பொதுத்துறையிடமோ இதுவரை இல்லை. இதனால் இந்த பில்டிங்குகளின் வரைபடங்களைத் தயாரித்து அளிக்க பொதுப்பணித் துறைக்கு பொதுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பழமையான கட்டடங்கள் ஒவ்வொன்றையும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அவற்றை அளவிட்டு வருகிறார்கள்.



20 Map of fort_st-_george1..mini


தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கட்டடங்கள் உள்ளன. இந்தக் கட்டடங்களில் அரசுத் துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, முதல்வர், அமைச்சர்களின் அறைகள் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்திலும், சேப்பாக்கத்தில் உள்ள பழமையான கட்டடங்களில் சில அரசுத் துறைகளின் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.



கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பழமையான கட்டடத்தில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் துறை இயக்குநரகம் செயல்பட்டு வந்தது. அந்தக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கோப்புகள் பல நாசமாகின. இதைத் தொடர்ந்து, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை இயக்குநரகம் இடம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மற்றொரு பழமையான கட்டடத்தில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் அலுவலகத்தின் மேற்கூரையும் சேதம் அடைந்தது. புனித ஜார்ஜ் கோட்டையில் 3 தளங்களில் செயல்பட்டு வரும் தலைமைச் செயலகக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் உயரதிகாரி ஒருவரின் வரவேற்பறை மேற்கூரையும் சேதம் அடைந்தது.


சேதம் அடைந்த அனைத்துக் கட்டடங்களையும் சீரமைத்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தையும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து, தலைமைச் செயலக அதிகாரிகள் கூறியது: புனித ஜார்ஜ் கோட்டை உள்பட பழமையான கட்டடங்களில் உள்ள ஒவ்வொரு அறைகளின் வடிவமைப்பையும் விளக்கும் வரைபடங்கள் ஏதும் பொதுத்துறையிடம் இல்லை. இதனால், பழமையான கட்டடங்களில் சேதங்கள் ஏற்படும் போது அவற்றின் பழமை மாறாமல் புதுப்பிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்தச் சிரமங்களைத் தவிர்க்க வரைபடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment